33 ஆண்டுகள் விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டிய டிரைவருக்கு தபால் தலை
திண்டுக்கல், ஜூன் 26–
திண்டுக்கல் கிழக்குமாரம்பாடியை சேர்ந்தவர் குழந்தைசாமி(வயது58). திண்டுக்கல் சமூகநலத்துறை அலுவலகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 1981–ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவர் வரும் 30–ந்தேதி ஓய்வு பெறுகிறார். 33 ஆண்டுகளாக இவர் விபத்து இல்லாமல் வாகனம் ஓட்டியுள்ளார். இதனால் அவரை கவுரவிக்கும் வகையில் சமூகநலத்துறை ஊழியர்கள் அவரது புகைப்படத்துடன் கூடிய தபால்தலையை வெளியிட ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த தபால் தலையை அவர் ஓய்வுபெறும் 30–ந்தேதி திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் வெளியிட்டு கவுரவப்படுத்துகிறார்.
இதுகுறித்து சமூகநலத்துறை கண்காணிப்பாளர் ரமேஷ் கூறுகையில், ஒரு ஊழியர் ஓய்வுபெறும் நாளில் அவருக்கு மோதிரத்தை வாங்கி கொடுத்தால் அந்த நேரத்தில்தான் சந்தோசமாக இருப்பார். வாழ்நாள் முழுவதும் வரலாற்றில் இடம்பெறும் வகையில் சிறப்பு செய்ய நினைத்த நாங்கள் அவருக்கு தபால்தலை வெளியிடுகிறோம் என்றார்.
ஓய்வு பெறும் டிரைவர் குழந்தைசாமி கூறுகையில்,
என் பணி காலத்தில் எந்தவித விபத்தும் இல்லாமல் வாகனத்தை ஓட்டினேன். எனக்கு குழந்தை இல்லை. அதே நேரத்தில் அனைத்து ஊழியர்களும் எனக்கு குழந்தைகளாக இருந்து என்னை புகழின் உச்சிக்கே அழைத்துச்சென்று தபால்தலை வெளியிட ஏற்பாடு செய்துள்ளனர். இது என் வாழ்நாளில் பெற்ற பேறாகும் என்றார்.
-மாலை மலர்
No comments:
Post a Comment