Tuesday, 10 November 2015

சேமிப்புக் கணக்குத் தொடங்கினால் பரிசு: அஞ்சல் துறை அறிவிப்பு


செல்வ மகள், பொன் மகன் வைப்பு நிதி சேமிப்புக் கணக்குத் திட்டத்தில், கணக்குத் தொடங்குபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என அஞ்சல் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதைத் தடுக்கவும், அவர்களுக்கு உயர் கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும், மத்திய அரசால் செல்வ மகள் ("சுகன்யா சம்ரித்தி') சேமிப்புக் கணக்கு என்கிற திட்டம் தொடங்கப்பட்டது. நிகழாண்டில் ஜனவரி 30-ஆம் தேதி, நாடு முழுவதும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.

அதேபோல் ஆண் குழந்தைகளிடமும் சேமிப்பு எண்ணத்தை அதிகரிக்கும் வகையில்,"பொன் மகன் வைப்பு நிதி' என்கிற திட்டம் தொடங்கப்பட்டது. மத்திய அரசால் இந்த இரண்டு நீண்ட கால சேமிப்புத் திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டன.

குழந்தைகள், பெற்றோரிடம் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக, அஞ்சல் துறைத் இந்தத் திட்டத்தில் இணையும் குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கத் திட்டமிட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 13, 14 ஆகிய இரண்டு தினத்தில் அஞ்சல் நிலையத்தில் சேமிப்புக் கணக்குத் தொடங்கும் குழந்தைகளுக்கு, மறைந்த டாக்டர் அப்துல் கலாமின் சிறப்பு நினைவு அஞ்சல் தலை, முதல் நாள் அஞ்சல் உறை, அவரைப் பற்றிய விவரங்களுடன் அடங்கிய கையேடு ஆகியவை பரிசாக வழங்கப்படும்.

சென்னை நகர அஞ்சல் மண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து அஞ்சல் நிலையங்களிலும், சேமிப்புக் கணக்குகளைத் தொடங்கலாம் எனவும் அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : http://www.tnguru.in/

No comments:

Post a Comment