Wednesday 24 February 2016

அன்புடன் துவங்கி......எங்கே எப்படி முடிப்பது !


நீங்கள் கடைசியாக கடிதம் எழுதி எத்தனை ஆண்டுகள் இருக்கும்? கடிதத்துக்காக தபால்காரரை எதிர்பார்த்துக் காத்திருந்த அனுபவம் உங்களுக்கு உண்டா? ஒரே கடிதத்தையே திரும்ப, திரும்ப, திரும்ப…. படித்து மகிழ்ந்திருக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் வரம் வாங்கி வந்தவர்கள். இந்தத் தலைமுறைக்கு கடிதம் என்று ஒன்று இருந்தது என்பதையே நாம் பாடப்புத்தகத்தில் காட்டித்தான் தெரிவிக்க வேண்டும்.
கடிதம் என்பது எவ்வளவு ஆத்மார்த்தமனது. எங்கள் வீட்டுக்கு வரும் கடிதங்களை எல்லாம் ஒரு கம்பியில் குத்தி வைத்திருப்பார்கள். பல வருட கடிதங்கள் நிறம் வெளிறி எழுத்து மங்கி வெளவால் போலத் தொங்கிக் கொண்டிருக்கும். வருடத்துக்கு ஒருமுறை அதில் தேவை இல்லாததை எடுத்துவிட்டு, முக்கியமான கடிதங்களைப் பெட்டிக்குள் பத்திரப்படுத்தி வைப்பார்கள். கோபம், சந்தோஷம், துக்கம் என மனிதர்களின் அத்தனை உணர்வுகளையும் கடிதங்கள்தான் சுமந்து வரும். கடிதங்களைப் படித்து அழுவார்கள். சிரிப்பார்கள். வெட்கப்படுவார்கள். தபால்காரருக்காக எத்தனையோ நாட்கள் வாசலைப் பார்த்தபடி உட்கார்ந்திருப்பார்கள். இன்னும் சிலரோ தபால்காரர் வரும் வரை காத்திருக்க மனசு இல்லாமல் தபால் ஆபீஸ் வாசலுக்கே போய் விடுவார்கள்.
நமக்கு விருப்பமானவர்களைப் பிரிந்து தனித்திருந்து பாருங்கள். அவர்களைப் பற்றி அதிகம் யோசிக்க முடியும். நினைக்க முடியும். அந்த சமயத்தில் கடிதம் எழுதினால், அது உணர்வோடு சம்பந்தப்பட்டு இருக்கும்.
ஆனால், இன்று...? தபால்காரருக்காக யாரும் காத்திருப்பதும் இல்லை. அவரை எதிர்பார்ப்பதும் இல்லை. தொலைபேசி பில்கள், ரசீதுகள், விளம்பரங்கள், வணிக நிறுவனங்களின் கையேடுகள், வந்தால் வரட்டும் என நினைக்கும் உறவுகளுக்கான திருமண அழைப்பிதழ்கள் மட்டுமே கடிதங்களாக அனுப்பப்படுகிறது. இன்றைக்கு எந்த நேரமும் செல்போனின் கட்டுப்பாட்டிலும், கண்காணிப்பிலும் மட்டுமே இருக்கிறோம் செல்போனும் கம்ப்யூட்டரும் இன்று மலிந்து போய்விட்டன. யாரும் கடிதம் எழுத அவசியம் இல்லை என்று நினைக்கிறார்கள். ஒருவகையில் இத் தொழில்நுட்ப வளர்ச்சி சந்தோஷம் தருகிறது. விருப்பமானவர்களுடன் விருப்பமான நேரத்திலே பேசிக் கொண்டுவிட முடிகிறது. பிரிவு உணர்வே இல்லாமல் போனதன் காரணமாகவோ என்னவோ சேர்ந்திருப்பதும், தொடர்ந்து சந்தித்து கொள்வதும் அலுப்புத் தர ஆரம்பித்துவிட்டது. செல்போன் தினசரிச் செய்திப் பத்திரிகைகள் இவை இல்லாமல் ரெண்டு நாள் நிம்மதியாகத் தனியாக இருக்கமுடியாதா என்ற ஏக்கம் எல்லோரிடமும் வந்துவிட்டது.
அஞ்சல் அட்டை என்பது ஒருகாலத்தில் சாதாரண மக்களின் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்திருந்தது. ஏழை மக்களும் பயன்படுத்திய முதல் தகவல் தொடர்பு சாதனம் அந்த அஞ்சல் அட்டை தான்! இன்று பெரும்பாலான அஞ்சல் நிலையங்களில் அஞ்சல் அட்டை இல்லை. அஞ்சல் அட்டை சேவையை நிறுத்தலாமா என மத்திய அரசு யோசித்து வருவதாகவும் பேச்சு வந்தது. 50 பைசாவுக்கு கட்டுபடியாகவில்லை என்று சொன்னால் விலையைக் கூட்டலாம். அதைத் தவிர்த்து ஒரு சேவையை நிறுத்த வேண்டும் என மத்திய அரசு ஏன் நினைக்கிறது? 35 வயதைக் கடந்த யாரை வேண்டுமானாலும் கேட்கட்டும்... அவர்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது அஞ்சல் அட்டையைப் பயன்படுத்தாமல் இருந்திருப்பார்களா? அந்தச் சேவை நம் தலைமுறையோடு முடிந்துவிட வேண்டுமா? இந்தத் தலைமுறைக் குழந்தைங்களுக்குக் கடிதம் எழுத கற்றுக் கொடுக்க வேண்டும். போஸ்ட் கார்டு என்றால் என்ன... இன்லேண்ட் கவர் என்றால் என்ன என்பதை அவர்களுக்குத் தெரியவைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கு இருக்கிறது.
ஆபிரகாம் லிங்கன் தனது மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடிதங்கள் என்றும் அழியாப் புகழ் பெற்றவை. நேரு தன் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் இன்றும் பொக்கிஷமாக இருக்கிறது. அண்ணா எழுதிய கடிதங்கள், காமராஜர் எழுதிய கடிதங்கள், எம்.ஜி.ஆர் எழுதிய கடிதங்கள் எல்லாம் இன்றும் வரலாற்று பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. 75 ஆண்டுகளாக கருணாநிதி தன் கட்சியினருக்கு எழுதிவரும் கடிதங்கள் தமிழக அரசியலில் தவிர்க்க இயலாத வரலாற்றுப் பதிவுகள். இவ்வளவு ஏன்..? கிராமங்களில் எத்தனையோ வீடுகளில் 50 வருடங்களுக்கு முன்பு வந்த கடிதங்களைக் கூட பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். அது அத்தனையும் ஆவணங்கள். செல் போன் பேச்சு என்றால் அது அன்றோடு போச்சு. எம்.எம்.எஸ். என்றால் இன்பாக்ஸ் நிரம்பும் வரை மட்டுமே. இமெயில் என்றால் அது பாஸ்வேர்டு மறக்காமல் இருக்கும் வரைதான்... ஆனால் கடிதங்கள் மட்டுமே காலத்தை கடந்து நிற்கும்! அதனால் அஞ்சல் அட்டையை நிறுத்திடாதீங்க ப்ளீஸ்!

1 comment: